பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை வரவுள்ளது. இதற்காக வெளியூரில் தங்கி வேலை செய்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தயாராகிவருகின்றனர். தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாத் தலங்களிலும் பயணிகள் வரவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற வகையில், 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் படகுக் குழாம்களிலும் (போட் ஹவுஸ்) படகுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள கோவளம், முட்டுக்காடு, முதலியார் குப்பம் படகுக்குழாம்கள் ஆகிய இடங்களில் படகுப்போட்டி நடக்கவுள்ளது. மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில், செய்யூர் தாலுகா இடைக்கழிநாடு, முதலியார் குப்பம் படகுக் குழாமில் 16ஆம் தேதி காலை 11 மணியளவில் சுற்றுலாப் பயணிகளுக்கு, கயாக் படகுப் போட்டி, துடுப்புப் படகுப் போட்டி, மிதி படகுப் போட்டி நடைபெறுகிறது.
இதேபோல கொடைக்கானல், ஊட்டி, பைக்காரா படகுக் குழாம்களிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்தப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள், தம்பதிகள் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் வெற்றிபெறும் சுற்றுலாப் பயணிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
முட்டுக்காடு படகுக் குழாமிற்கு 9176995826 என்ற எண்ணிலும், முதலியார் குப்பம் படகுக் குழாமிற்கு 9176995827 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பார்வையாளர்களை கவர்ந்த சித்த மருத்துவ கண்காட்சி