சென்னை: Exam Paper Correction: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களைத் திருத்த, கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் பார்த்து விடைத்தாளைத் திருத்துபவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் திருத்தும் வகையில் நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாப்பான முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
'தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்ற மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேர்வுகள் நடத்தி விடைத்தாள் திருத்தம் செய்வதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
செயற்கை நுண் தொழில்நுட்பம்
பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நடைபெற்றுவந்த தேர்வுகளை ஏற்கனவே பல்கலைக்கழகத்திலிருந்து இணையம் மூலம் கண்காணிக்கும் முறை அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
மேலும் இந்த முறையில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நடைபெறும் தேர்வினை ஒரே நேரத்தில் பல்கலைக்கழகத்திலிருந்து கண்காணிப்பது இருந்தது.
அதனைத் தவிர்க்கும் வகையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (செயற்கை நுண் தொழில்நுட்பம்) பயன்படுத்தப்பட்டுத் தேர்வு அறையில் தேர்வர்கள் முறைகேடான செயலில் ஈடுபட்டால் உடனடியாகத் தெரியும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் தேர்வின் போது தேர்வர்கள் ஏதாவது தகாத செயலில் ஈடுபட்டால் உடனடியாக கண்டறிந்து பல்கலைக்கழகத்திலிருந்து அதனைச் சரிசெய்ய முடியும்.
கரோனா தொற்றால் தேங்கிய தேர்வுத் தாள்கள்
மருத்துவ மாணவர்களுக்கான விடைத்தாள்களை விடைத்தாள் திருத்தும் பல்கலைக்கழகத்தில் நேரில் வந்து கம்ப்யூட்டரில் பார்த்துத் திருத்த வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மருத்துவ மாணவர்களுக்கு வைக்கப்பட்ட தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்படாமல் இருந்தன.
ஆனால், அதே நேரத்தில் அவர்களுக்கான தேர்வு முடிவுகள் அளிக்கப்பட்டால் கரோனா தோற்று பணியில் அவர்களால் பணியாற்ற முடியும்.
இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் உதவியுடன் மருத்துவ மாணவர்களின் விடைத்தாள்கள், விடைத்தாள் திருத்துபவர்கள் இருக்கும் இடங்களிலேயே கம்ப்யூட்டர் மூலம் திருத்துவதற்கான நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
மேலும் விடைத்தாள் திருத்தம் செய்யும்பொழுது அவரது முகம் முழுவதும் கம்ப்யூட்டரில் தெரிந்தால் மட்டுமே விடைத்தாள் கம்ப்யூட்டரில் தெரியும். அவர் முகம் தெரியாவிட்டால் விடைத்தாள் தெரியாது. மேலும் விடைத்தாள் திருத்தும் அவர் தனது பணியை முடித்துவிட்டு எப்பொழுது வேண்டுமானாலும் திருத்த முடியும்.
இதனால், அவர் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து தங்கி விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைமை மாறியது. மேலும் அவரின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படாமல் விடைத்தாளைத் திருத்தினர். இதனால் பல்கலைக்கழகத்திற்கும் செலவு குறைந்தது. தேர்வு முடிவுகள் விரைந்து வெளியிட முடிந்தன.
அதேபோல் தேர்விற்கான வினாத்தாள்கள் முன்பு அந்தந்த கல்லூரியில் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துத் தரப்படும். வரும் காலத்தில் அதனை மாற்றி சில புதிய நடவடிக்கைகள் செய்யப்படவுள்ளன.
ரகசிய குறியீட்டு எண்கள்
வருங்காலத்தில் மேலும் தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் போது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ரகசிய குறியீட்டு எண்கள் வழங்குவதிலும் நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதனால் விடைத்தாளை திருத்தி அவர்களுக்கு யாருடைய விடைத்தாள் என்பது முற்றிலும் கண்டறிய முடியாத நிலைமை உருவாக்கப்படும்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:2021ஆம் ஆண்டில் நம்மை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள்!