சென்னை: (Doctor MGR University convocation) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் 12ஆயிரத்து 814 பேருக்கு மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் பட்டங்களையும், சான்றிதழ்களையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று பட்டங்கள் வழங்கி சிறப்பிக்க இருக்கின்றனர்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளத் தகவலில்,' தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா நாளை (20.12.2021) காலை 11 மணியளவில் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா அரங்கில் நடைபெறுகிறது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநரும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று பட்டங்கள் வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார்.
சிறப்பு விருந்தினர்கள்
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழாப்பேருரை ஆற்றுகிறார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான மா.சுப்பிரமணியன் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
பட்டம் பெறுபவர்களின் விவரம்
இவ்வாண்டு மருத்துவத்தில்(Medical) 5,589 நபர்களுக்கும், பல் மருத்துவத்தில் (Dental) 1,621 நபர்களுக்கும், இந்திய மருத்துவத்தில் (Indian Medicine) 381 நபர்களுக்கும், மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகள் (Allied Health Sciences) 2,077 நபர்களுக்கும், செவிலியர் படிப்பில் (Nursing) 671 நபர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளது.
மேலும் Occupational Therapy மருத்துவத்தில் 126 நபர்களுக்கும், மருந்தியியல்(Pharmacy)1,435 நபர்களுக்கும்,இயன்முறை மருத்துவத்தில் (Physiotherapy) 914 நபர்களுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 814 நபர்களுக்குப் பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படயிருக்கிறது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் 25 நபர்களுக்கு முனைவர் பட்டங்கள் (பிஹெச்டி), உட்பட 104 நபர்களுக்கு தங்கப் பதக்கம் வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட மொத்தம் 129 நபர்களுக்கு விழா மேடையிலேயே பட்டங்களை நேரடியாக வழங்குகிறார். மீதமுள்ள நபர்களுக்கு கல்லூரிகள் மூலம் வழங்கப்படும்.
பெண்களே அதிகம்
இந்த ஆண்டு பட்டம் பெறுபவர்களில் பெண்களே அதிகமாகும். இதில் 37 விழுக்காடு ஆண்களும், 63 விழுக்காடு பெண்களும் பட்டங்கள்/ சான்றிதழ்கள் பெறுகின்றனர்.
நூல் வெளியீடு
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மரு.சுதா சேஷய்யன் தயாரிப்பில் உருவாகியுள்ள “Pandemic and Problems: Lessons for recovery and resilience” எனும் ஆங்கில நூலை தமிழ்நாடு ஆளுநர் வெளியிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். இந்த நூலில் புகழ்பெற்ற வல்லுநர்கள் 25 நபர்களின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்றுள்ளன.
பதக்கங்கள் பெறுபவர்களின் பட்டியல்
இதில் முதலாவதாக எம்.பி.பி.எஸ் படிப்பில் தஞ்சை மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த டாக்டர் பிரவீன் மட்டுமே 7 தங்கம், வெள்ளி பதக்கங்களையும் மற்றும் 6 பாராட்டுச் சான்றிதழ்களையும் பெறுகிறார்.
மகப்பேறு மருத்துவப் பிரிவில் கன்னியாகுமரி ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி சார்பாக டாக்டர் விஷ்ணு பிரியா மட்டுமே 3 தங்கம், வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் 3 பாராட்டுச் சான்றிதழ்களையும் பெறுகிறார்.
பொது அறுவை சிகிச்சைப் பிரிவில் திருச்சி கே.ஏ.பி விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் சதீஷ் மட்டுமே 4 தங்கம், வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் ஒரு பாராட்டுச்சான்றிதழையும் பெறுகிறார்.
எம்.பி.பி.எஸ் பிரிவில் சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த சரண்ராம் 3 வெள்ளிப் பதக்கங்களும் மற்றும் 2 பாராட்டுச் சான்றிதழ்களும் பெறுகிறார்.
காஞ்சிபுரம் வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சார்ந்த பிரியங்கா 3 தங்கம், வெள்ளிப் பதக்கங்களும் மற்றும் 2 பாராட்டுச் சான்றிதழ்களும் பெறுகிறார்.
நேரடி ஒளிபரப்பு
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி முழுவதும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில்(www.tnmgrmu.ac.in) வலைத்தள ஓளிப்பரப்பு மூலம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:IT Park in Karur:'மேட் இன் கரூர் பிரபலமடைய வேண்டும்' - அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு