தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3500ஐ கடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் உள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எவ்வித தீவிர சிகிச்சையும் அளிக்க வேண்டிய தேவையும் ஏற்படவில்லை. இதனால் நோய் அறிகுறியுடன் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் தவிர, மற்றவர்களை வீட்டில் தனிமைப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில், ”பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை இயக்குநர் கரோனா பாதித்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். அதன்படி, கரோனா தொற்றுக்கான சிறிய மற்றும் சாதாரண அறிகுறிகள் உள்ளவர்களை மருத்துவர் பரிசோதனை செய்த பின்னர், வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கலாம்.
நோய் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்கள், தனியாக இருப்பதற்குத் தேவையான கழிவறை உள்ளிட்ட வசதிகள் இருந்தால் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தலாம். தொற்று ஏற்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு, மருத்துவரின் ஆலோசனைப்படி, ’ஹைட்ரோ குளோரோகுயின்’ மாத்திரையை வழங்கலாம். கரோனா பாதித்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஜிங்க் (zinc), வைட்டமின் மாத்திரைகளையும், நில வேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்க வேண்டும்.
'ஆரோக்கிய சேது' மொபைல் ஆப் டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். மருத்துவக் குழுவினர் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புபவரிடம், அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புகிறார் என்பதை எழுத்துப்பூர்வமாக எழுதிப் பெற வேண்டும்.
கரோனா நோய் ஆபத்து நிலை
நோயாளிக்கு இருமல், 102 டிகிரிக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, மன அழுத்தம், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் மூன்றடுக்கு பாதுகாப்பு முகக்கவசத்தை அணிய வேண்டும். அதனை 8 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்டவர் அறையில் மற்றவர்கள் உள்ளே நுழையக் கூடாது. நோயாளிக்கு ஓய்வு அளிப்பதுடன், சத்தான உணவுகள் மற்றும் பழச்சாறுகள் அளிக்க வேண்டும். கைகளை 40 நிமிடத்திற்கு ஒரு முறை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்“ எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் உள்ளோரில், தீவிர சிகிச்சை தேவைப்படாத நோய் தொற்று உள்ளவர்கள், விருப்பப்பட்டால் வீட்டிற்கோ, அரசின் தடுப்பு முகாமுக்கோ, தனியார் மருத்துவமனைகளுக்கோ அனுப்பி வைக்கலாம் எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படாது - தமிழ்நாடு அரசு!