கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பொதுமக்கள் கூடுமிடங்களில் நோய்த் தாக்கத்தினை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிந்து வருகின்றனர். நோய் தொற்றைத் தவிர்க்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சுகாதார அறிவுரைகளை அலைபேசி வாயிலாக விளம்பரம் செய்தும் வருகின்றன.
அதில் அடிக்கடி கைகளை சோப், திரவ வடிவ சோப், சானிடைசர் போன்றவற்றைக் கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, இப்பொருட்களுக்கு சந்தையில் அதிகத் தேவை ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, சில விற்பனையாளர்கள் இப்பொருட்களை அதிக விலைக்கு விற்பதாகத் தெரிய வருகிறது.
எனவே, முகக்கவசம் (மாஸ்க்), சோப், திரவ சோப், சானிடைசர் தயாரிக்கும் நிறுவனங்கள், தயாரிக்கப்பட்ட பொருட்களை பிளாஸ்டிக் கன்டெய்னர், பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும் பொழுது, சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள் 2011 இன் படி அந்த பாக்கெட்டுகளில் தயாரிப்பாளர், பேக்கர் முழு முகவரி, பொருளின் அளவு அல்லது எண்ணிக்கை, நிகர எடை, அளவு பொருள் தயாரிக்கப்பட்ட மாதம், ஆண்டு, காலாவதியாகும் மாதம், ஆண்டு, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை (அனைத்து வரிகள் உட்பட), புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டு விற்பனை செய்யவேண்டும்.
மேற்கண்ட விதிமுறைகளை மீறி பொட்டலமிடுபவர்கள் மீதும், பொருளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கு அதிகமாக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மருந்து நிறுவனங்கள், இதர வணிக நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மேற்கண்ட பொருட்களில் குறிப்பிட்டுள்ள விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது TNLMCTS என்ற மொபைல் செயலி வழியாக புகார் தெரிவிக்கலாம் அல்லது clmchennaitn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது 044-24321438 என்ற தொலைபேசி வாயிலாகவோ புகார் தெரிவிக்கலாம்.
இதையும் படிங்க: 'கோழிக்கறியால் கரோனா?' - இழப்பை மீட்க இலவச கிரேவி