காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகியவற்றைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டு சட்டப்பேரவையில் சட்டமுன் வடிவம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவே அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையொட்டி கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி பிறப்பித்தது. அதன்படி கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் உள்ள சுமார் 57,500 ஏக்கர் நிலங்கள், பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டன.
இதற்கு டெல்டா மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாலும் கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
இதையும் படிங்க: வேளாண் மண்டல சட்ட முன்வடிவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப எதிர்கட்சிகள் வலியுறுத்தல்!