இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், மாநிலச் செயலாளர் சாந்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்புச் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களைப் பாதிக்காத பல கட்டப் போராட்டங்கள் சென்ற ஆண்டு நடத்தப்பட்டன.
மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்த, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், முதலமைச்சரின் பேச்சை நம்பி, போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டது.
ஆனால், அனைத்தையும் மீறி 120-க்கும் மேற்பட்ட மருத்துவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசு இடமாறுதல் செய்தது. மருத்துவர்கள் பணியாற்றிய துறைகளிலிருந்து, முற்றிலும் மாறுபட்ட வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டனர். பழிவாங்கல் நடவடிக்கைகளை உடனடியாக ரத்துசெய்ய பலமுறை அரசை கேட்டுக் கொண்ட போதிலும், அரசு அதை ஏற்கவில்லை.
இதனால் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளுக்குள்ளான மருத்துவர்கள், வேறு வழியின்றி இடமாறுதல் உத்தரவுகளை ரத்துசெய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், இடமாறுதல் உத்தரவுகளையும், இதர பழிவாங்கும் நடவடிக்கைகளையும் ரத்துசெய்துள்ளது. மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இது வரேவற்கத்தக்கது.
ஆனால், அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்ய உரிமையில்லை என நீதிமன்றம் கருத்துக் கூறியிருப்பது, அரசியல் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் எதிரானது.
எனவே, பழிவாங்கல் நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட்டு, அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்க முன்வர வேண்டும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் போன்ற இக்கட்டான காலகட்டத்தில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை அரசு அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போராட்டம் செய்த அரசு மருத்துவர்களைப் பணிமாற்றம் செய்த அரசின் உத்தரவு ரத்து!