கரோனா அச்சத்தால் ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு நிபந்தனைகளுடன் நடத்த, தமிழக அரசு கடந்த 23 ஆம் தேதி அனுமதித்தது. இந்நிலையில் போட்டி நடத்துவதற்கான மேலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,
- ஜல்லிக்கட்டு காளைகளுடன் வழக்கமாக 5 முதல் 6 பேர் வரை வரும் நிலையில், இந்தாண்டு காளை உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் என இருவருக்கு மட்டுமே அனுமதி.
- ஜல்லிக்கட்டு காளையுடன் வரும் காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் இருவரும் பரிசோதனை செய்து கரோனோ இல்லை என்ற உறுதி சான்று பெற வேண்டும்.
- காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும்.
- அடையாள அட்டை இல்லாதவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.
- ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் போட்டி நடைபெறும் 7 நாட்களுக்கு முன்பாக, மாவட்ட நிர்வாகம் வழங்கும் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.
- அடையாள அட்டை இல்லாத மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி இல்லை.
- தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
- நடைமுறைகளை மீறுவோர் உடனடியாக ஜல்லிக்கட்டு வளாகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
- ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்து துறை அலுவலர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் பரிசோதனை செய்து கரோனா தொற்று இல்லை என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி.
- எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி.
- மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50% அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ள அனுமதி.
- போட்டியைக் காண பார்வையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதி.
உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு!