உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கி வரும் கரோனோ வைரஸின் தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. சீனாவின் வூகானில் ஆரம்பித்த இந்தக் கொடிய உயிர் கொல்லி வைரஸானது, தற்போது இத்தாலி, ஈரான் உள்ளிட்ட ஏழு நாடுகளில் தீவிரமடைந்து வருகிறது. இந்தியா முழுவதும் கரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை மூன்று பேர் இந்தியாவில் இந்நோய்க்கு உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.
கரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள முகக் கவசங்கள் முக்கியக் கேடையமாகப் பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் முகக்கவசங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது என்றாலும், சிறப்புக் கவசமான ’N95’ முகக்கவசத்தை சிறைத்துறை உதவியுடன் தயாரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
N95 முகக்கவசம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்தவுடன், சிறைக்கைதிகளைக் கொண்டு உடனடியாக பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சிறையில் கைதிகள் ஆடைகள் தயாரித்துள்ளதால், அதற்கான அனுபவமும், கருவிகளும் உள்ளதால் அவர்களைக் கொண்டு மிக வேகமாக N95 சிறப்பு முகக்கவசத்தை தயாரிக்க முடியும் எனவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல் - சிறைகளுக்குக் கட்டுப்பாடு