இதுதொடர்பாக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு 17ஆம் தேதி, ஜெயலலிதாவின் இல்லம் நினைவு சின்னமாக மாற்றப்படும் என்றும், தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் செய்த சாதனைகள் மற்றும் தியாகங்களை நினைவுகூரும் வகையில் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
முதலமைச்சரின் அறிவிப்பை அமல்படுத்துவதற்காக, சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள ’வேதா நிலையத்தை’ கையகப்படுத்த, தமிழ் வளர்ச்சித் துறையால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, நிலம் மற்றும் கட்டடத்தை கையகப்படுத்த நடவடிக்கை தொடங்கப்பட்டு, பூர்வாங்க அறிவிப்பு கடந்தாண்டு வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் இம்மாத ஆரம்பத்தில் அரசு வெளியிட்ட அறிவிப்பில், வேதா நிலைய கட்டடம், அங்குள்ள நகைகள் போன்ற அசையும் பொருள்கள் உள்ளிட்டவற்றை கையகப்படுத்தும் செயல்முறை முடிவடையும்வரை சொத்துகள் அனைத்தையும், பராமரிப்பிற்காக அரசிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வேதா நிலையம் மற்றும் அங்குள்ள பொருள்களை மாநில அரசிடம் கையகப்படுத்தவும், வேதா நிலையத்தை நினைவுச் சின்னமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' நிறுவவும் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளார்.
அறக்கட்டளைத் தலைவராக முதலமைச்சரும், துணைத் தலைவராக துணை முதலமைச்சரும் இருப்பர். மேலும், செயலாளராக தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அலுவலர்கள் உறுப்பினர்களாகவும், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் உறுப்பினர் செயலராகவும் இருப்பார்கள். இந்த அறக்கட்டளை வேதா நிலையத்தை பராமரிப்பது, சொத்துகளை நிர்வகிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் “ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அதிமுக ஐடி விங் மண்டல் செயலாளர்கள்