தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
மின் துறை அறிவிப்புகள்
1. தொழில்நுட்பம், வணிக இழப்புகளைக் குறைக்கும்வகையில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் திட்டம் சென்னை மாநகரத்தில் உள்ள சுமார் 42 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு, 4300 கோடி ரூபாய் செலவில் முதலில் செயல்படுத்தப்படும். பிற மாவட்டங்களில் படிப்படியாகச் செயல்படுத்தப்படும்.
2. மதுரை மாவட்டம் அழகர்கோவில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம், 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையமாகவும், கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர், மதுரை மாவட்டம் திருப்பாலையில் உள்ள 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள், 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களாகவும் தரம் உயர்த்தப்படும். சிவகங்கை மாவட்டம் அரசனூரில் ஒரு புதிய 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும். 22 எண்ணிக்கையிலான 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரத்து 998 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
3. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டுசெல்லும் மின் பாதைகளில், சுமார் 200 கிலோ மீட்டர் நீளப்பாதை, 300 கோடி ரூபாய் செலவில் புதைவடங்களாக மாற்றப்படும்.
4. மின் பகிர்மான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த, 23 இடங்களில் புதிய 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், செயல்பாட்டில் இருக்கும் 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களில் உள்ள 13 மின் மாற்றிகள் கூடுதலாகவோ / திறன் உயர்த்தியோ, அமைக்கப்படும். இப்பணிகள் 187 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
1. ஊரகப் பகுதிகளில் 2020-21ஆம் நிதி ஆண்டில் 350 கி.மீ. நீளத்திற்கு சிமெண்ட் கான்கிரீட் சாலைகளும், 200 கி.மீ. நீளத்திற்கு பேவர் பிளாக் சாலைகளும், 213.26 கோடி ரூபாயில் அமைக்கப்படும். மேலும் 850 குறு பாலங்கள், 350 சிறு பாலங்கள் என மொத்தம் 1,200 பாலங்கள் 170 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
2. ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், மத்திய, மாநில நிதிக்குழுவின் நிதி, அம்மா ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட நிதி ஆகியவற்றிலிருந்து 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
3. ஊரகப் பகுதிகளில் ஆயிரத்து 44 கி.மீ. நீளமுள்ள 299 ஊரகச் சாலைகள் 553.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
4. ஊரகப் பகுதிகளில் இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்திட, 2020-21ஆம் நிதி ஆண்டில் 1,150 கி.மீ. நீளத்திற்கு ஓரடுக்கு கப்பிச் சாலைகள் 246.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
5. ஊரகப் பகுதிகளில் 10 ஆயிரம் சிமெண்ட் கான்கிரீட்
தடுப்பணைகள் 460 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
6. ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிக் கட்டடங்களுக்கு 2020-21ஆம் நிதியாண்டில் 650 கி.மீ. நீளத்திற்கு 440.5 கோடியில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
7. ஊரகப் பகுதிகளில் ஒன்பதாயிரம் மாட்டுக் கொட்டகைகளும், ஆறாயிரம் ஆட்டுக் கொட்டகைகளும் என மொத்தம் 15 ஆயிரம்
கொட்டகைகள் 258.60 கோடியில் கட்டித் தரப்படும்.
8. 500 தனி நபர் கிணறுகள் தலா ஏழு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய், 500 சமுதாயக் கிணறுகள் தலா 12 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஆயிரம் கிணறுகள் 98.65 கோடியில் அமைக்கப்படும்.
9. மிகவும் பழுதடைந்து, பயன்பாடின்றி உள்ள 500 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு தலா 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்.
10. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2020-21ஆம் ஆண்டில் 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
11. ஊரகப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் முதியோர் பயன் பெறும்வகையில், ஐந்து முதல் 10 உறுப்பினர்களைக் கொண்ட 12 ஆயிரத்து 525 'முதியோர் சுய உதவிக் குழுக்கள்' ஊராட்சிக்கு ஒன்று என்ற அளவில் ஏற்படுத்தப்பட்டு, ஆதார நிதியாகக் குழு ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் 18.79 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
1. அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம், குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள், நகர்ப்புற சாலை ஆகியவை உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்.
2. கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளான துடியலூர், வடவள்ளி, கவுண்டம்பாளையம் மற்றும் வீரகேரளம் பகுதிகளை உள்ளடக்கிய 14 வார்டுகளில், 610 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
3. மதுரை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஏற்கனவே இரண்டு கட்டங்களாகப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மூன்றாம் கட்டமாக, எஞ்சியுள்ள 57 வார்டுகளிலும், குடிநீர் விநியோகக் குழாய் பதித்து, வீட்டு இணைப்புகள் வழங்க, 310 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
4. கோயம்புத்தூர், மதுரை மாநகரத்தில் போக்குவரத்து மேலாண்மை, போக்குவரத்து தகவல் மையத் திட்டம் போன்றவைகளை கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களுடன் ஒருங்கிணைத்து, திறன்மிகு போக்குவரத்து முறையை செயல்படுத்திட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.
5. சென்னையில் சிறுதொழில் முனைவோர், மாணவர்களின் கண்டுபிடிப்புகளை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி விளக்கும் வகையில், புதுமுறைக் காணல் மையம் சீர்மிகு நகர நிறுவனத்தின்கீழ் ஏற்படுத்தப்படும்.
6. மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் பயன்பாடின்றி உள்ள திறந்தவெளி நிலங்களில், 'மியாவாக்கி' முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் நடப்படும்.
7. மாநராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் போதிய இடவசதி உள்ள பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், யோகா மையம் அமைக்கப்படும்.
8. தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் நகராட்சி பேருந்து நிலையத்திற்கு ஒரு புதிய ஓடுதளமும், வாரச்சந்தை உள்பட பல உள்கட்டமைப்புகளும் அமைக்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்த சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் வழங்கப்படும்.
9. துப்புரவுப் பணியாளர்களின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றிடவும், அனைத்துத் துப்புரவுப் பணியாளர்களும், இனி 'தூய்மைப்பணியாளர்கள்' என்று அழைக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க: கரோனா அச்சம் - வெளிநாடுவாழ் தமிழர்களை மீட்க அரசு போர்க்கால நடவடிக்கை