சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், நீதிபதிகளுக்கு எதிராக தொடர்ந்து புகார் கூறி வந்ததால், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருந்த சக நீதிபதிகள் மீதும் புகார் கூறியதால், அவர் மீது உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து அவர் சமூக வலைதளங்களில் அவதூறான வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அவர் வெளியிட்ட வீடியோக்களை நீக்கும்படி யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. முன்னாள் நீதிபதி கர்ணனை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகர், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் நீதிபதி கர்ணன் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்தார். அரசு மற்றும் காவல்துறை இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இது நீதித்துறையை மிகவும் அவமதிக்கும் செயல் என்றும், எனவே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து நவம்பர் 23 ஆம் தேதி இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாட பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு!