சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று (ஏப்.12) சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, கேள்வி ஒன்றிற்குப் பதிலுரை வழங்கும்போது, தாகம் ஏற்படவே பேசிக் கொண்டே அருகில் அமர்ந்திருந்த வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் தண்ணீர் என கை காட்டினார். அதனை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கவனிக்காததால், பேசுவதை நிறுத்திவிட்டு 'நான் எத்தனை முறை உனக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தேன்' எனக் கேட்க, பின் அவர் தண்ணீர் எடுத்து கொடுத்தார்.
இதனால், பேரவையில் சிரிப்பு அலை ஏற்பட்டது. இதே போல, அனைத்து கட்சியினரும் முதலமைச்சரை பாராட்டியபோது முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவையில் பாராட்டினர். இவையெல்லாம் என்றுமே காணாத காட்சியாக இருந்தது. அடுத்து பேசுகையில், அமைச்சர் எ.வ.வேலு, ஒரு கூட்டல் கணக்கு ஒன்றைக் கூறினார்.
கட்டு + இடம் = கட்டிடம்
கட்டிடம் + கலை = கட்டிடகலை
கட்டு + மானம் = கட்டுமானம்
'ஒழுங்கா கட்டினால் தான் மானமே இருக்கும். இல்லைனா.. போயிடும். அதனால், தான் கட்டுமானம் என பெயர் வைத்தார்கள்’ என கூறிய அவர் ’கட்டடத்தின் மானமே கட்டடத்தின் தரத்தில்தான் இருக்கிறது. எனவே, அந்த வகையில் கட்டுமானம் என்பதை மையன் என்கிற கட்டட கலைஞர் தான் சங்க காலத்தில் முதன்முறையாக கட்டட கலைக்கு இலக்கணம் வைத்தார்' என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதம்