கன்னியாகுமரி மாவட்டத்தில் துணிக்கடை நடத்தி வரும் செல்வராஜ் என்பவருக்கும், அவரது சகோதரருக்கும் இடையே சொத்துப் பிரச்னை நிலவி வந்தது.
அந்தப் பிரச்னை பேசித் தீர்க்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்ட தக்கலை மண்டல காவல் துணை கண்காணிப்பாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். அவருக்கும் செல்வராஜின் அண்ணன் மகனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும், இல்லை என்றால் பொய் வழக்கில் கைது செய்துவிடுவதாகவும் செல்வராஜை காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மிரட்டியுள்ளார். இதற்கு மறுப்புத் தெரிவித்த செல்வராஜை, 2019ஆம் ஆண்டு மே மாதம் காவல் துறையினர் கைது செய்து துன்புறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட செல்வராஜ் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், காவல் துறையினருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட செல்வராஜுக்கு இழப்பீடாக 6 லட்சம் ரூபாயை நான்கு வாரத்திற்குள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த தொகையை சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடமிருந்து வசூலிக்கவும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்ற நீதிபதி உத்தரவு ரத்து - தீர்ப்பின் முழுவிவரம்