சென்னை கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மீது புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
சென்னையில் ஏற்கெனவே சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆகியவற்றில் படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகார்கள் குறித்து விசாரணை செய்ய தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு மேலும் மூன்று பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறும்போது, 'மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்து நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை நேரில் அழைத்து விசாரணை செய்ய அழைப்பாணை(summon) அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் புகார் அளித்தது சம்பந்தமாக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல புகார்கள் இ-மெயில் மூலம் வந்து கொண்டிருக்கின்றன. அனைத்துப் புகார்களையும் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 18 வயதிற்கு உட்பட்ட பாதிக்கப்படும் மாணவிகள், சிறுமிகள் ஆணையத்திடம் தைரியமாகப் புகார் அளிக்க முன்வர வேண்டும். குறிப்பாக, scpcrtn1@gmail.com என்ற இ-மெயில் மூலம் புகார்களை அனுப்பலாம்’ என்றார்.
மேலும் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் புகார்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசிற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.