பாசன வசதிக்காக மேட்டூர் அணையைத் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அதில் கூறியதாவது; 'மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கரை கால்வாய் பாசனப் பகுதியில் உள்ள நிலங்களுக்கு பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு வேண்டுகோள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையின் கிழக்குக்கரை கால்வாய் பாசனப் பகுதியில் 27,000 ஏக்கர் நிலங்களும், மேற்குக் கரை கால்வாய் பாசனப் பகுதியில் 18,000 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மேட்டூர் அணையிலிருந்து வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும்; நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மையை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.