சென்னை: ஓணம் கொண்டாடும் மக்களுக்கு தமிழ்நாடு பாஜக சார்பில், அதன் தலைவர் அண்ணாமலை வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், "தொடர்ந்து தொல்லை தரும் தொற்றுநோய்களும், படிக்கும்போதே பதைபதைப்பு ஏற்படுத்தும் பட்ஜெட்டுகளும், ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியும், இறங்கு முகத்தில் இருக்கும் தொழில் வருமானமும், நம்மைத் தொடர்ந்து வாட்டிக் கொண்டிருக்கும் வேளையில் பண்டிகைகளும் திருவிழாக்களும் தானே நம் நம்பிக்கைகளை உலர்ந்து விடாமல் ஈரப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதிலும் ஓணம் பண்டிகையின் சிறப்பு என்னவென்றால் தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவே ஓணம் திருநாளில் மகாபலி சக்கரவர்த்தி இந்த பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். நாம் நலமாக இல்லை என்றால் கூட மாமன்னரின் வருகை நமக்கு நலம் பயக்கும் என்ற நம்பிக்கை வருவதால் ஓணம் சிறப்புக்குரியது.
அத்தப்பூ கோலமிட்டு, அழகான தோரணங்கள் கட்டி, நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்க நாம் தயாராவது போல மகாபலியை வரவேற்கும் விதமாக வண்ண மலர்களால் அழகுபடுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் வாழ்கின்ற கேரள மக்களும், கேரளத்தில் வாழுகின்ற தமிழ் மக்களும், சகோதர வாஞ்சையோடு மகிழ்ந்து கொண்டாடும், மகத்தான திருவிழா ஓணம் பண்டிகை.
ஓணம் திருவிழா அறுவடைத் திருவிழாவாகவும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், கொண்டாடும் திருவிழாவாகவும் திகழ்கின்ற ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.