சென்னை: ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் கருணாஸ், இனியா, ரித்விகா, அருண்பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஆதார். இப்படத்திற்கு ஶ்ரீகாந்த்தேவா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இவ்விழாவில் கருணாஸ், பூச்சி முருகன், பாரதிராஜா, அமீர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய தேவா, “அற்புதமான படம். கருணாஸ் என்ன மாதிரி நடித்துள்ளார். படத்தில் நடித்துள்ள அனைவரும் அருமையாக நடித்துள்ளனர்.
ஶ்ரீகாந்த் இப்படி அழகான மெலோடி பாடல்களை வழங்கினால் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் மெலோடி பாடல்கள் நிறையப் போட்டுள்ளேன். ஆனால் கானா பாடல்கள் எனக்கு பிராண்டாக அமைந்துவிட்டது. நீயும் இப்படத்தின் பாடல்கள் போன்று மெலோடி பாடல்கள் அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அருண் பாண்டியன் பேசுகையில், “18 ஆண்டுகளுக்குப்பிறகு நான் நடித்த அன்பிற்கினியாள் திரைப்படம் எனக்கு மட்டுமல்ல எனது மகள் கீர்த்தி பாண்டியனுக்கும் பெயர் வாங்கி தந்தது.
அதற்குப் பிறகு எனக்குப் பிடித்த கதை ஆதார் படத்தினுடையது. தமிழ் திரையுலகின் பொற்காலம் இப்போது இல்லை. நாங்கள் நடித்த காலம் தான் உண்மையான பொற்காலம். விஜய், அஜித் பெரும் தொகையை அவர்களே சம்பளமாகப் பெற்றுக் கொள்வதால் படத்தின் தரம் குறைகிறது. எனது வன்மையான கண்டனங்கள். மற்ற மொழி திரைப்படங்கள் தான் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன” எனத் தெரிவித்தார்.
ஶ்ரீகாந்த் தேவா: இப்படத்தின் பின்னணி இசை அமைக்கவே என்னை இயக்குநர் அணுகினார். பிறகு ஒரேயொருப் பாட்டு வைத்தோம் அதுதான் தேன்மிட்டாய் மாங்காத்துண்டு. யுரேகாவின் வரிகள் அற்புதமாக உள்ளன.
அமீர்: இதனையடுத்து பேசிய இயக்குநர் அமீர், ‘நாம் ஏன் கொடுக்கிறோம் என்று கேட்க வேண்டும். ஒருநாளும் தமிழ்சினிமா பின்னோக்கி செல்லாது. ஒரு ஆர்ஆர்ஆர் அல்லது ஒரு கேஜிஎஃப்பை வைத்துப் பின்னோக்கி செல்வதாக நினைக்க வேண்டாம்.
எல்லா காலகட்டத்திலும் ஹீரோக்கள் பின்னால் செல்வது இருந்தது. இங்கிருந்து நிறையக் கலைஞர்கள் மற்ற மொழிகளில் பணியாற்றியுள்ளனர். ஒரு படத்தை வைத்து தமிழ் சினிமாவை எடை போட வேண்டாம்’ எனத் தெரிவித்தார்.
படத்தின் கதாநாயகன் கருணாஸ்: கூவத்தூர் சம்பவத்திற்குப் பிறகு நான் பணம் பதுக்கி வைத்திருப்பதாக நினைக்கிறார்கள். இப்படத்தை நான்தான் பினாமி வைத்து எடுத்துள்ளதாகச் சிலர் நினைக்கிறார்கள்.
அமீர் என்னை வாழ்த்திப் பேசியது எனது பாக்கியம். ராம் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் என்போன்ற சிறிய கலைஞனுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. திரைத்துறையில் சம்பாதித்தாலும் இழந்தாலும் சினிமா என்னைக் கைவிடவில்லை. சினிமாவில் ராம்நாத் என்பவரைச் சம்பாதித்து வைத்துள்ளேன்.
அருண்பாண்டியன் தயாரிப்பாளர் என்பதால் ஆதங்கத்தில் பேசிவிட்டார். சம்பளம் வாங்குங்கள் தப்பில்லை. ஆனால் எவ்வளவு வாங்குகிறீர்கள் என்பது முக்கியம். சமீபத்தில் தெலுங்கில் பிரமாண்டமாகச் செலவழித்து அற்புதமாகப் படம் எடுக்கின்றனர்.
முன்னர் தெலுங்கு என்றாலே கேவலமாகப் பேசுவோம். இப்போது அற்புதமாகப் படம் எடுக்கின்றனர். ஶ்ரீகாந்த் தேவா தலைக்கணம் இல்லாதவன். படம் நன்றாக வந்துள்ளது. அமீரை வைத்து படம் இயக்க வேண்டியது. ஆனால் முடியவில்லை. இப்போது ஒரு படம் இயக்கவுள்ளேன் அதில் நிவர்த்தியாகிவிடும். வீதியில் சென்றவர்கள்தான் எனது படத்தின் நாயகர்கள்” எனப் பேசினார்.
இதையும் படிங்க:மகனை நினைத்து கண் கலங்கிய சிவக்குமார்...!