சென்னை: தமிழ்நாட்டில், 2020- 21 கல்வியாண்டில் கரோனா தொற்றுக் காரணமாக ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என முதலமைச்சர்தான் முடிவு செய்து அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி மாணவர்களுக்கான பாடங்கள் கல்வித் தொலைக்காட்சி மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் இருந்துதான் பொதுத் தேர்வில் கேள்விகள் இடம்பெறும் என கூறினார்.
இந்த நிலையில், கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நடப்பு கல்வியாண்டில் கற்றல், கற்பித்தல் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநில கல்வியியல் ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பாடத்திட்ட குறைப்பு பணிகளை செய்துள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. பாடத்தில் எந்தப் பகுதி தேவையில்லை என்பதை அறிந்து குறைத்துள்ளோம். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, கடந்த ஜூன் மாதம் முதல் அரசின் கல்வித் தொலைக்காட்சியில் ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தி வருகின்றனர்..
அதேபோல் 11,12ஆம் வகுப்புகளுக்கான கணக்கு, அறிவியல் பாடத் திட்டங்கள் குறைக்கப்படவில்லை. இவை மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தயாராக பயனுள்ளதாக இருப்பதால் மாற்றம் செய்யப்படவில்லை. வேறு பாடங்களை சிறிது குறைத்து அளித்துள்ளோம்.
அவர்களுக்கான பாடங்களை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் குறைத்து, கம்ப்யூட்டர் ஆய்வகங்களின் மூலம் பதிவேற்றம் செய்து அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படும் போது, ஒவ்வொரு பாடத்திலும் எந்தப் பகுதி குறைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் மாணவர்களுக்கு அளிக்கப்படும். அரசால் குறைக்கப்பட்ட பாடங்கள் மட்டுமே கல்வித் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படுகிறது. மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியிலும், பின்னர் அதனை யூடியூப் சேனலிலும் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் என்றார்.
இதையும் படிங்க : தேசிய நாட்டு நலப்பணித்திட்ட விருதாளர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து!