கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. பத்து மாதங்கள் கழித்து தற்போது, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நாளை முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செய்து வருகிறது.
இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை குறைத்துள்ளது. முக்கிய மற்றும் எளிதான பகுதிகள் நீக்கப்படாமலும், சற்றுக் கடினமான பகுதிகளை நீக்கியும் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் செய்முறைத் தேர்வுகளும் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை செனாய் நகர் திரு.வி.க. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கூறும்போது, ”அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரே நேரத்தில் வந்து செல்லாத வகையில் வகுப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வீதம் உட்காருவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கான ஏற்பாடாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு முழு பாடத்திட்டங்களையும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனக் கூறினார்.
இதுகுறித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறும்போது, ”நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதற்கு உரிய பாடத்திட்டங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. கடினமான பகுதிகளை விருப்பப்படும் மாணவர்களுக்கு நடத்துவோம். அவர்கள் உயர்கல்வி பெறுவதற்குரிய முக்கிய பகுதிகள் அப்படியே இருக்கின்றன. ஆகவே, மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நீதிபதிகள் குறித்து துக்ளக் குருமூர்த்தி பேசிய விவகாரம் - வழக்கு தொடுக்க உயர் நீதிமன்றம் அனுமதி