சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் உலக தற்கொலைத் தடுப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டு அரசு மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் தற்கொலைத் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியத்தினை வரைந்தனர்.
அதனைத்தொடர்ந்து அரசு மனநல காப்பகத்தில் புறநோயாளிகள் பிரிவில் உலக தற்கொலைத் தடுப்புதின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்களின் நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் பூர்ண சந்திரிகா, ”ஆண்டுதோறும் உலக தற்கொலைத் தடுப்பு தினம் செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. உலகளவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கின்றனர். உலக அளவில் ஒவ்வொரு 40 வினாடிகளில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
சமூகத்தில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு வாழ முடியும். தற்பொழுது வளரிளம் பருவத்தினர் மற்றும் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் மொபைல் வாங்கித் தராவிட்டால் தற்கொலைக்கு முயல்வது, குடும்பத்தில் பிரச்னை என்றால் தற்கொலைக்கு முயல்வது என அனைத்திற்கும் தற்கொலை தான் தீர்வு என தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
தற்கொலை எண்ணம் தோன்றுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குடும்பத்தில் பணப்பிரச்னை ஏற்பட்டு கடன் கொடுத்தவர்கள் வந்து கேட்கும்போதோ, வேலையில்லாமல் இருக்கும்போதோ வீட்டில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை வந்தால் அவர்களில் தாய் அடிக்கடி இறந்துவிடுவேன் என கூறுவதை குழந்தைகள் கேட்கும் பொழுது தற்கொலை எண்ணம் தோன்ற வாய்ப்புள்ளது.
சமூகப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் தனிமனிதனுக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்தாலும் தற்கொலை எண்ணம் தோன்றும். எனவே தான் வாழ்க்கைமுறை குறித்த கல்வியைப் பள்ளிகளிலும் கற்பித்து வருகிறோம். தற்கொலை செய்து கொள்பவர்களில் சிலருக்கு மன நோய் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் மன நோய் பிரச்னை இருக்காது.
நமது வாழ்க்கை வாழ்வதற்காகத்தான். ஏதாவது சண்டை என்றாலும் அது நடக்கும்போது எடுத்து வாட்ஸ் ஆப் வீடியோவில் போடுகின்றனர். அதுபோன்ற வீடியோக்களை பிரபலப்படுத்தக்கூடாது. வாழ்க்கை என்பது விளம்பரப்படுத்துவதற்காக அல்ல வாழ்வதற்குத்தான்” என்றார்.