தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆனாலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வித் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், கரோனா வைரஸ் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி, 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. அதே நேரத்தில் பள்ளிக்கு மாணவர்கள் விரும்பினால் வரலாம் எனவும், வீட்டிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சுமார் பத்து மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். மேலும், வெகு நாட்களுக்குப்பின் நண்பர்களை சந்திப்பது பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும், நீண்ட இடைவெளிக்குப் பின்னான நேரடி வகுப்புகள் மிகவும் பயனளிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிகளில் மன அழுத்தமாக தாங்கள் கருதினால் அதற்கு தேவையான ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் ஆசிரியர்கள் அளிப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர். அரசு வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்வதாகவும், அதனால் வகுப்பறையிலேயே அவர்களுக்கு தியானம் போன்ற பயிற்சிகள் அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.
இதையும் படிங்க: காந்தி நினைவுநாளில் பள்ளி குழந்தைகளுக்காக அமைதி சங்கம்