சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஊர்கட்டுப்பாடு இருப்பதால், தின்பண்டம் கொடுக்க முடியாது என கூறியுள்ளனர்.
இதனையடுத்து அந்தக்கடைக்கு சீல் வைத்தும், உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுத்து, திராவிட மாடல் என்பதை வெறும் வார்த்தையால் மட்டும் அல்லாமல் அதனை உடனடியாக முதலமைச்சர் நிரூபித்து காட்டி உள்ளார்.
இந்த நிகழ்வு தமிழ்நாட்டிற்கே ஒட்டுமொத்தமாக ஒரு செய்தியை சொல்கின்றது. இந்தியாவிற்கே போராடிய தந்தை பெரியார் பிறந்த மாநிலம் தான் இந்த மாநிலம். தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவம் நடந்தால் அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்ககூடிய முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் என்பதை காட்டுகிறது.
பள்ளிகளை பொறுத்த மட்டில் அனைவரும் சமத்துவம் என சொல்லக்கூடிய ஒரு கூடம். அத்தகைய பள்ளிகூடங்களில் ஒரு சில இடங்களில் சில வருந்தத்தக்க சம்பவங்கள் நடைபெறுவது கவலையளிக்கிறது.
அப்படி ஒரு பள்ளியில் மாணவர்களுக்காக வழங்கப்பட்ட சத்து மாத்திரைகள், சில சமுதாய மாணவர்களுக்கு வழங்கப்படாமல் எரிக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பள்ளிகள் அனைத்தும் சமத்துவமாகத்தான் இருக்க வேண்டும். அதில் யாராவது சாதி பாகுபாடு காட்டுவது போன்ற ஒரு செயலில் ஈடுபட்டால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 23 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களில் 11 பேர் தான் வருகை புரிந்து இருந்தனர். எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 3 வட்ட மேஜைகள் போடப்பட்டு இருக்கும்.
மாணவர்கள் அனைவரும் சமமாக அமர வைக்கப்பட்டு, பாடம் நடத்தப்படும். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் அறிக்கை அளித்துள்ளார். 11 பேர் வந்துள்ளனர் என்றால், வராத 12 மாணவர்களிடம் இது போன்ற பாகுபாடு காட்டப்படுகிறதா? என்பதை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளோம். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை கண்டிப்பாக மேற்கொள்ளப்படும்.
முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளில் தனது கனவுத்திட்டமான குழந்தைக்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். முதல் கட்டமாக 1545 பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு துவக்கப்பட்டுள்ளது.
திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒவ்வாெரு நாளும் ஒவ்வொரு உணவும், காய்கறி அதிகம் சேர்த்தும் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தாலும், அதன் பின்னர் செயல்படுத்துவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டு, வெற்றிகரமான திட்டமாக சிறப்பாக செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை 8 மணி 15 நிமிடம் முதல் 8 மணி 30 நிமிடத்திற்குள் வழங்க வேண்டும் என கூறியுள்ளோம்.
இந்த திட்டம் சமூக நலத்துறையின் திட்டம். அவர்கள் அளிப்பதை பள்ளிக்கல்வித்துறை பெற்றுக்கொள்ளும். வரும் காலத்தில் திட்டத்தினை செயல்படுத்த பணியாளர்கள் நியமிப்பது குறித்தும் விவாதிப்போம்.
தனியார் பள்ளிகளுக்கான இயக்குனரகத்திற்கு இயக்குனர் நியமனம் செய்யப்படும் போது அந்தத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமித்தால் சரியாக இருக்கும் என கூறுகின்றனர். ஐஏஎஸ் அதிகாரிகளை பொறுத்தவரையில் மேற்பார்வை செய்வதில் தான் இருக்கிறது. இயக்குனருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மிக விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்.
காய்ச்சலால் பாதிப்பு ஏற்படும் போது பள்ளிகளுக்கு முகாம் தேவைப்படுகிறதா? பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டுமா? என்பதை முதலமைச்சர் அலுவலகம் தான் முடிவு செய்யும். மருத்துவத்துறை, வல்லுனர் குழுவினருடன் கலந்துப் பேசி தேவைப்படும் பட்சத்தில் கண்டிப்பாக இதற்கான முடிவு அறிவிக்கப்படும்.
நீட் தேர்வை 12 ஆயிரம் மாணவர்கள் எழுதி உள்ளனர். அதில் 4 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை என்பதற்காகத்தான் கட்சி வேறுபாடு இன்றி போராடி வருகின்றனர். ஆனாலும், நீட் தேர்விற்கான பயிற்சி உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.