சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எதிர்காலச் செயல்திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் இன்று (ஜூலை 30) காலை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் தலைவர்கள் மீது சமூக ஊடகங்களில் இழிவாகப் பதிவுசெய்பவர்களை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அழகிரிக்கு முழு அதிகாரம்
சமீபகாலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் நற்பெயரைச் சிதைக்கின்ற வகையிலும், கட்சிக் கொள்கைகளுக்கு விரோதமாக சமூக ஊடகங்களில் கட்சியினரே கருத்துகளைப் பதிவுசெய்து வருவதாகவும், வேறு எந்த அரசியல் கட்சியிலும் காணாத அநாகரிகப்போக்கு காங்கிரசில் இருப்பதாகவும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் மீது இழிவுபடுத்துகிற வகையில் பதிவுசெய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை ஒழுங்கு நடவடிக்கைக்குழு மேற்கொள்ள வேண்டும் என இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கட்சியின் நற்பெயரை பொதுமக்கள் மத்தியில் ஊடகங்கள் வாயிலாக இழிவுப்படுத்துபவர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இல்லாமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கு இக்கூட்டம் முழு அதிகாரம் அளித்துள்ளது.
- மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு,
- சமூக செயல்பாட்டாளர்கள் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தல்,
- ஊடக சுதந்திரத்தை நசுக்கும் வகையில் வருமானவரித் துறை சோதனை நடத்துதல்,
- பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்
உள்ளிட்ட 10 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.