ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, “இத்தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடந்துமுடிவதற்கு உதவியாக இருந்த அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள், காவல் துறையினர், தேர்தலில் பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 6ஆம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்கவுள்ளனர்.
திமுக தெரிவித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது அவர்களுக்கே தெரியும். இத்தேர்தலில், முறைகேடுகள், சட்ட விதிமீறல்கள் 100 விழுக்காடு ஏதுமில்லை என உறுதிசெய்துள்ளோம்.
வாக்குகள் எண்ணப்பட்டு 99 விழுக்காடு வெற்றி நிலவரங்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவருகிறது. மீதி விவரங்கள் தொடர்ந்து பதிவேற்றப்படும். இந்தியத் தேர்தல் ஆணையம் கொடுத்த வாக்காளர்கள் பட்டியலைத்தான் நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்.
எதுவும் ரகசியமாகச் செய்யப்படவில்லை. அடுத்தபடியாக நகராட்சி, மாநகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின், ஊரகப் பகுதி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கவுள்ளோம். வெற்றிபெற்றவர்கள் தவிர்த்து, வேறு நபருக்கு வெற்றி அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்யும்“ எனக் கூறினார்.
இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் நடந்த பகுதிகளில் நடைமுறையிலிருந்த நடத்தை விதிமுறைகள் இன்றுடன் தளர்த்தப்படுவதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவிற்கு மக்கள் தந்த பதில் உள்ளாட்சித் தேர்தல் தோல்வி - உதயநிதி ஸ்டாலின்