அண்ணா அறிவாலயத்தில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில், இலங்கை பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ”இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆக்கபூர்வமான, சுதந்திரமான விசாரணையை நடத்த நிறைவேற்றப்பட்ட ஐநா சபையின் மனித உரிமை ஆணையத் தீர்மானம் 40/1-ஐ, இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதும், மனித உரிமை ஆணையத்திற்கு அளித்த உத்தரவாதத்தை இலங்கை அரசு மீறிவிட்டது என்பதும் தற்போது தெளிவாகத் தெரிகிறது.
1987 ஆம் ஆண்டு உருவான இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அளித்த உத்தரவாதத்திற்கு எதிராகவே இலங்கையில் அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு அரசும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில், ’ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க, இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்’ என்று, ஐநா சபையின் மனித உரிமை ஆணையத்தில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும், இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்தும், ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளன.
அதன்படி, மனித உரிமை ஆணையத்தின் 46 ஆவது கூட்டத்தில், மற்ற உறுப்பினர்களுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட்டு, இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுவதை பிரதமர் உறுதி செய்திட வேண்டும். அதேபோல், 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு பிரதமர் அளவிலும், தூதரக அளவிலும் தக்க நடவடிக்கையை எடுத்திட வேண்டும். பிரதமரின் உடனடி முயற்சியும், தலையீடும் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் முக்கிய இடம்பெறும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள்! - சீமான் அறிவிப்பு!