இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், "தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தடுப்பூசியை மொத்தமாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு அனுப்பும் நடைமுறையை பின்பற்றியதற்கு நன்றி. தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் இருந்து வந்த நிலையில், தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்வது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், தடுப்பூசிகளுக்கான தட்டுபாடு மிகப் பெரிய இடராக உள்ளது.
மக்கள் தொகையை அடிப்படையில் ஒப்பிடுகையில் தமிழகத்துக்கு மற்ற மாநிலங்களைவிட குறைவான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனை சரிசெய்ய தமிழகத்துக்கு கூடுதலாக 1 கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என கோரியிருந்தேன். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை.
இதனிடையே மற்ற மாநிலங்களுடன் தமிழகத்துக்கு தடுப்பூசி வழங்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மாநிலங்களுக்கு ஏற்கெனவே அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
மற்றொரு முக்கிய விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தற்போதைய சூழலில் தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 விழுக்காடு மாநிலங்களுக்கும், 25 விழுக்காடு தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படுகிறது. இதன்மூலம், வசதி படைத்தவர்கள் தேவையான தடுப்பூசிகளை பெற முடிவதோடு, தடுப்பூசி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் இழப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
ஆனால், தனியார் மருத்துவமனைகள் குறைவான அளவிலேயே தடுப்பூசிகளை செலுத்துவதால் இந்த நடைமுறை மூலம் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. உதாரணமாக, தமிழ்நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட 1.43 கோடி தடுப்பூசிகளில் 4.5 விழுக்காடு, அதாவது 6.5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தனியார் மருத்துவமனைகளால் போடப்பட்டது.
நடப்பு மாதத்திலும்கூட போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் வெறும் 10 விழுக்காடு மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் போடப்பட்டது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் ஒரு மாதத்துக்கு தேவையான அளவுக்கு 7-8 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒரு நாள் தேவைக்கான 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன.
மாநிலங்களுக்கு 90 விழுக்காடு தடுப்பூசிகளும், தனியார் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு தடுப்பூசிகளும் வழங்கப்பட வேண்டும். இதனால் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும்"என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டிற்கு வரும் 2 லட்சம் தடுப்பூசிகள்