முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 29) சென்னையில் மயிலாப்பூர், தி. நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
மயிலாப்பூர் வேட்பாளர் நட்ராஜ், தி. நகர் வேட்பாளர் சத்யா, அண்ணா நகர் வேட்பாளர் கோகுல இந்திரா மூவரையும் ஆதரித்துப் அவர் பரப்புரைசெய்தார். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "இந்தியாவில் சட்டம்-ஒழுங்கைப் பேணிக்காக்கும் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.
மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம், குற்றங்கள் குறைப்பு, மெட்ரோ ரயில் திட்டம், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்வு, கல்விக்கடன் ரத்து, அம்மா மினி கிளினிக் எனப் பல்வேறு நலத்திட்டங்கள் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சியில், சென்னை மக்களுக்கு கண்ணன் தேர்வாய் கண்டிகை தண்ணீர் சேமிப்பு மூலம் தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது. திமுக ஆட்சியின்போது தண்ணீர்ப் பிரச்சினைத் தீர்க்கப்படவில்லை. திமுக ஒரு ரவுடி கட்சி. பொய்கள் பேசியே ஆட்சி அமைக்க மு.க. ஸ்டாலின் எண்ணுகிறார்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சர் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல், பூந்தமல்லி, அம்பத்தூர் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: ’வீடுகள் இல்லாத மீனவர்களுக்கு கான்கிரீட் அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும்’ - முதலமைச்சர் வாக்குறுதி