திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திலிருந்து கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், திமுக சார்பில் கரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டறிந்தார். குறிப்பாக ’ஒன்றிணைவோம் வா’ திட்டம் குறித்து அவர் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், இனிவரும் நாள்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும் கட்சி நிர்வாகிகளிடையே அவர் விவாதித்தார்.
கடந்த மார்ச் 29ஆம் தேதி திமுகவின் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கின் காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று, கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் இன்றி நடைபெற்றுள்ளது. திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் காலமானதை அடுத்து அப்பதவியும், துரைமுருகனின் விலகலையடுத்து பொருளாளர் பதவியும் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: '23ஆம் புலிகேசியின் அரசியல் வடிவம் ஸ்டாலின்' - அமைச்சர் கிண்டல்