சென்னை: கரோனா தொற்றின் காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றதாக அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்ச்சி எனப் பதிவிட்டு மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '2020-21ஆம் கல்வியாண்டில் படித்து மார்ச் 2021ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 11 மணி முதல் 31ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ்
மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வு எண் ஆகியவை அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அரசு தேர்வுத் துறையால் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.
மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் வாசிப்பு இயக்கம்’ - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு