'நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் முறையாக தமிழ்நாட்டில் வழங்கப்படவில்லை, அதற்கான பயிற்சிகளும் வழங்கப்படவில்லை என்பதால், அதை தடை செய்யுங்கள். ரத்தத்தால் பெற்றெடுத்த குழந்தைச் செல்வங்களை காவு வாங்காதீர்கள்' எனப் பெற்றோர் கொடி பிடித்தும், அழுதும், புரண்டும், போராடி பார்த்தும் மத்திய அரசின் மனம் இறங்கவில்லை என்பதே காலம் கற்றுத்தந்த பாடமாக உள்ளது.
எதுவாக இருந்தாலும் தாம் விரும்பிய ஒன்றை அடைய முடியவில்லை அல்லது அதற்கு நமக்கு தகுதியில்லை என நினைத்துக்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்வது எதற்கும் தீர்வாகாது. உலகை வெல்ல எத்தனித்த இளைய சமுதாயம் எடுத்துக்கொண்டிருக்கும் முடிவுகளும் ஏற்கத்தக்கதல்ல என்பதே உண்மை. பேரிழப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கும் பெற்றோரின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அரியலூர் மருத்துவ மாணவி அனிதாவில் தொடங்கிய இந்த அவலம், திருச்செங்கோடு மோதிலால் உள்பட 16க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதில் தனது பிள்ளையை கேரளாவில் நீட் தேர்வு எழுதுவதற்காக அழைத்துச் சென்ற திருவாரூரைச் சேர்ந்த தந்தை, மன உளைச்சலில் திருவனந்தபுரத்திலேயே உயிரிழந்தார் என்பதும் கொடுமையின் உச்சம். இது போன்ற அவல நிலைகளை தவிர்க்க சென்னையில் பிரபல மனோதத்துவ மருத்துவர் சிவபாலன் என்ன சொல்கிறார் எனக் கேட்போம்...
இத்தனை மாணவர்களின் உயிர்கள் பறிபோன பின்பும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்துமா என்கிற கேள்வி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் எழுந்துள்ளது.
நீட் தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் விவரம் பின்வருமாறு:
1. அனிதா, அரியலூர்,
2. ப்ரதீபா, விழுப்புரம்,
3. ஏஞ்சல், சென்னை,
4. ஸ்ரீருதி, திருவள்ளூர்,
5. ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை
6. வைஸ்யா, தஞ்சாவூர்,
7. தனலட்சுமி, திருநெல்வேலி,
8. சுபஸ்ரீ, கோயம்புத்தூர்,
9. சுபஸ்ரீ, திருச்சி,
10. விக்னேஷ், அரியலூர்,
11. அருண்பிரசாத், கடலூர்,
12. கரிஸ்மா, புதுக்கோட்டை,
13. ஜோதி ஸ்ரீதுர்கா, மதுரை,
14. ஆதித்யா, தருமபுரி
15. கிருஷ்ணசாமி, பெற்றோர் - திருவாரூர் (திருவனந்தபுரத்தில் உயிரிழந்தார்).16.மோதிலால், திருச்செங்கோடு