சென்னை: ரயிலிலிருந்து தவறிவிழுந்து சிறப்பு காவல்படை காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேல்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்துவருபவர் மோகன் (41). இவர் 2002ஆம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலராகப் பணியில் சேர்ந்து சிறப்புக் காவல் படையில் பணியாற்றிவந்தார்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 26) காலை பணிக்காகக் கிளம்பிய அவர் ராமேஸ்வரம் விரைவு ரயிலின் வாயில் பகுதியில் நின்றுகொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ரயில் சேத்துப்பட்டு - எழும்பூர் பகுதிகளுக்கிடையே சென்றுகொண்டிருந்தபோது, காவலர் மோகன் கால்தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர், சம்பவ இடத்திற்குச் சென்று காவலர் மோகனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து எழும்பூர் ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பணிக்காக வந்த காவலர், ரயிலிலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.