ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்ரீதரன் என்பவர் முன்பிணை கோரி, திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தியது.
இதேபோல ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும் முன்பிணை மனுவை விசாரிக்க மறுத்ததால், தன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீதரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எம். தண்டபாணி முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞர் ஆர். சண்முகசுந்தரம், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் என்பது, அமர்வு (மாஜிஸ்திரேட்) நீதிமன்றமாகக் கருதப்படுவதால் முன்பிணை மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாக வாதிட்டார்.
அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் அய்யப்பராஜ், முன்பிணை மனுக்களை விசாரிக்க அமர்வு (மாஜிஸ்திரேட்) நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் மட்டுமே அதிகாரம் உள்ளதாக வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்திற்கு ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், முன்பிணை மனுக்களை விசாரிக்க அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் கூறி, ஸ்ரீதரனின் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக முன்பிணை மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்த நீதிபதி, இந்த உத்தரவை தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டுசென்று, அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப, உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வெளிநாடு செல்ல சசி தரூருக்கு அனுமதி