திருவள்ளூர்: திருவேற்காட்டில் குடிபோதையில், தந்தையை அடித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
திருவேற்காடு, காமதேனு நகரைச்சேர்ந்த டெல்லி(63) என்பவரது மகன் டிரைவராக உள்ள பிரகாஷ்(35). இவரது மனைவி தேவி மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பிரகாஷ் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தினமும் குடிபோதையில் குடும்பத்தினருடன் சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த அவரது மனைவி தேவி குழந்தைகளுடன் பெருமாளகரத்திலுள்ள தனது தாயார் வீட்டிற்குச்சென்றுவிட்டார். இவ்வாறு மனைவி, குழந்தைகள் கோபித்துச்சென்றதால் இன்று (செப்.13) மீண்டும் வீட்டிற்குத் தள்ளாடியபடி குடிபோதையில் வந்து, அவரது தந்தை டில்லியுடன் பயங்கரமான தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தந்தை மகனுக்கிடையே நடந்த இந்த தகராறில் பிரகாஷ், தனது தந்தை டில்லியை பலமாக வீட்டின் சுவரில் முட்டவைத்ததைத்தொடர்ந்து அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், நடந்தவை குறித்து போலீசாருக்கு அளித்த தகவலைத்தொடர்ந்து திருவேற்காடு போலீசார் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருவேற்காடு போலீசார் பிரகாஷை கைது செய்தனர்.
இதையும் படிங்க: Viralஆகும் கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட புகைப்படம்