சமீப காலமாக சமூக வலைதளப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதில் தொடங்கி, இறுதிச் சடங்குகளை நேரலையாகக் காண்பிப்பது வரை சமூக வலைதளப் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
மேலும் அறியப்படாத குற்றங்களை வெளிக்கொண்டு வரவும், குற்றங்கள் நடப்பின் அதை நொடிப்பொழுதில் நாடு முழுவதும் கொண்டுசெல்லவும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்திவருகின்றனர். குறிப்பிட்ட சாதி, மதம், பெண்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களைக் கையாண்டு கருத்தினைப் பரப்பிவருகின்றனர்.
இது போன்ற கருத்துகள், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அமைவதால் தமிழ்நாடு காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சமூக வலைதளங்கள் மூலமாக அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக 75 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் எல்லை மீறிய அளவில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்ட 16 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர்களின் சமூக வலைதளப் பக்கங்களிலிருந்த காணொலிப் பதிவுகள் அழிக்கப்பட்டு முடக்கியிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துப் பதிவிட வேண்டும்
இது குறித்து சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன், "சமூக வலைதளம் மூலமாக விபிஎன் சர்வரை பயன்படுத்தி பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் பலர் நாட்டின் இறையாண்மையைக் கெடுக்கும்விதத்திலும், பெண்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டால் காவல் துறையிடம் சிக்க மாட்டார்கள் என நினைத்துப் பதிவிட்டுவருகின்றனர்; இது முற்றிலும் தவறு.
சமூக வலைதளம் மூலமாக அவதூறு பரப்பினால் சம்பந்தப்பட்ட செயலி, அந்த நபர்களின் விவரங்களை 36 மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்யலாம் எனச் சட்டம் உள்ளது. அரசு சமூக வலைதளங்களைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறது. ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துப் பதிவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
காவல் துறையினரால் மட்டுமே இந்தச் சமூக வலைதளக் குற்றங்களைத் தடுக்க முடியாது. சமூக வலைதளத்தை எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்ற பார்வை மாறினால் மட்டுமே மிரட்டுவது, ஆபாசம் போன்ற வருங்கால சந்ததியினரைத் தவறான பாதைக்கு கொண்டுசெல்லக்கூடிய சம்பவங்கள் குறையும்.
இதையும் படிங்க: 'டெலிபோன் ஒட்டுக்கேட்பு- நீதி விசாரணை கோரும் காங்கிரஸ்!'