சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் ஏரியில் அப்பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது, தாம்பரம் நகராட்சியின் கழிவுநீர் கொட்டப்படுவது, ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பது குறித்தும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏரி ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தாம்பரம் தாசில்தாரருக்கு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (பிப்.9) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொதுப்பணித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அப்பகுதில் குறிப்பிட்ட சர்வே எண்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்டு வழக்கை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், 2019ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தாம்பரம் தாசில்தாரருக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க...வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!