சென்னை: பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான இறுதிகட்ட இணையவழி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை இன்றும், நாளையும் (அக்டோபர் 13,14ஆம் தேதி) பதிவு செய்யலாம்.
அக்டோபர் 15ஆம் தேதி தற்காலிகமாக மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் விரும்பம் தெரிவித்தபின், 17ஆம் தேதி இறுதியாக கல்லூரிகளைத் தேர்வு செய்ததற்கானப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
நான்காம் கட்டக்கலந்தாய்வில் பங்கேற்க 49,115 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரையில் 3 சுற்றுகளாக முடிவடைந்துள்ளன.
பொறியியல் கலந்தாய்வு
மாணவர் சேர்க்கைக்கான இணையவழிக் கலந்தாய்வு இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. சிறப்புப்பிரிவு கலந்தாய்வு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.
முதல் சுற்று கலந்தாய்வில் 11,224 மாணவர்களும், 2ஆம் சுற்றில் 20,438 மாணவர்களும், 3ஆவது சுற்றில் 23,716 மாணவர்கள் என 55 ஆயிரத்து 378 மாணவர்களும் பொதுப்பிரிவு கலந்தாய்வின் மூலம் இடங்களை தேர்வு செய்துள்ளனர். மூன்றாம் சுற்று கலந்தாய்வின் முடிவில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி மேற்கொண்ட ஆய்வில், "3ஆம் சுற்றுக்கலந்தாய்விற்கு 41,910 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 23,327 மாணவர்கள் (55.65%) இடங்களை தேர்வு செய்துள்ளனர். இதுவே கடந்த ஆண்டு 3ஆவது சுற்றுக் கலந்தாய்விற்கு 35 ஆயிரத்து 730 பேர் அழைக்கப்பட்டு, 20,999 (58.77%) பேர் இடங்களைத் தேர்வு செய்தனர்.
மாணவர் சேர்க்கை
நடப்புக்கல்வி ஆண்டில் 3 சுற்றுக்கலந்தாய்விற்கு 86 ஆயிரத்து 118 பேர் அழைக்கப்பட்டதில்; 53,838 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
பொறியியல் படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களான 1,35,773 இடங்களில் 3 சுற்று முடிவில் 81,935 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதுவரை 39.85 விழுக்காடு இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. நடப்புக் கல்வியாண்டில் சுமார் 60,000 இடங்கள் காலியாக இருக்கும்.
தமிழ்நாட்டிலுள்ள 9 சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் உள்ள 100 விழுக்காடு இடங்களும் நிரம்பியுள்ளன. 41 கல்லூரிகளில் 90 விழுக்காட்டு இடங்கள் நிரம்பியுள்ளன. 62 பொறியியல் கல்லூரிகளில் 80 விழுக்காடும், 113 கல்லூரியில் 50 விழுக்காடு இடங்களும், 152 கல்லூரியில் 10 விழுக்காடு இடங்களும், 93 பொறியியல் கல்லூரிகளில் 10 இடங்களுக்கும் குறைவாக ஒற்றை இலக்கத்திலும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மேலும் 21 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள இடங்களில் மீதமுள்ள 50 விழுக்காடு இடங்கள் இன்னும் நிரம்பாமல் உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை - பொறியியல் மாணவர் சேர்க்கையில் அதிர்ச்சித் தகவல்