சென்னை: கோபாலபுரத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவி நேற்று (பிப்ரவரி 7) மதியம் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்வதற்காகப் புறப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து சென்ற சிறிது தூரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக ஏற்றி அவரை இருசக்கர வாகனத்தில் வைத்தே பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் வீடு திரும்பிய மாணவி, தனது பெற்றோரிடம் அந்தப் பாலியல் துன்புறுத்தல் மட்டுமின்றி சிகரெட்டால் சுட்டும் துன்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராயப்பேட்டை காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கி, சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்து சோதனை நடத்திவருகின்றனர்.
தொடரும் விசாரணை
முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் இருக்கக்கூடிய கோபாலபுரத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததாகப் புகார் வந்தபோது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மாணவி கூறியது போன்று இருசக்கர வாகனத்தில் மாணவியை வலுகட்டாயமாக ஏற்றினார்களா என்பதை உறுதிசெய்வதற்காக அந்தப் பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்துவருகின்றனர்.
மாணவி கூறுவது உண்மைதானா அல்லது பள்ளிக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக இப்படி ஏதேனும் திரித்துக் கூறினாரா அல்லது தேர்வைத் தவிர்ப்பதற்காகக் கூறினாரா எனப் பல்வேறு கோணங்களில் ராயப்பேட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் குழந்தைகள் நலக் குழுவினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் மாணவியிடம் தனியாக தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஃபேஸ்புக்கில் பழகியவரை கர்ப்பமாக்கிய காவல்துறை புள்ளி - நடவடிக்கை எடுப்பார்களா?