உலகையே கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கல்வி நிலையங்களை வரும் 31ஆம் தேதி வரை மூட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி காலை வரை 144 தடை உத்தரவையும் பிறப்பித்தார். குறிப்பாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே பொது இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று 144 தடை உத்தரவை மீறி சூளைமேடு சி.ஹெச். சாலையில் 5க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதனைக் கண்ட சூளைமேடு காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீது சட்டப்பிரிவு 269இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ராஜ் கபூர் (26), வினோத் குமார் (27),வீரபாண்டியன் (22), சாந்தன் (27), விக்னேஷ் (22) என்பது தெரியவந்தது. இதேபோல் சூளைமேடு சி.ஹெச். கான் தெருவில் 144 தடை உத்தரவை மீறியதாகக் கூறி யுகேஷ் (36), சித்தார்த்(36) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கில் ஜாலியாக மீன் பிடித்த இளைஞர்கள் - தோப்புக்கரணம் போட வைத்த காவல்துறை!