சென்னை: சென்னை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் யாரையும் நேரில் வர கட்டாயப்படுத்தக்கூடாது எனவும், மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் எனவும் துணைவேந்தர் கெளரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி கூறியதாவது, ” சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்கள் யாருக்கும் இதுவரை கரோனா தொற்று இல்லை. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சென்னை பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாநகராட்சி மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் கிண்டி வளாகம், சேப்பாகத்தில் உள்ள மெரினா வளாகம் ஆகியவற்றில் உள்ள மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய உள்ளோம்.
மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் செல்வதற்கு முன்னர், பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றன. மாணவர்களுக்கு கிருமி நாசினி அளித்தல், முகக்கவசம் அணிதல், உடல் வெப்பப் பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. பெற்றோரும், மாணவர்களும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சென்னை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு வர வேண்டும் என கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலமும் நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கான பருவத்தேர்வுகளும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்தப்படும் ” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக இரண்டு மாணவர்களுக்கு கரோனா இல்லை!