சென்னை: ரயில் மூலம் குற்றச்செயல்கள் நடைபெறுவதைத் தடுக்கும்வகையில் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜனவரி 20) சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தபோது, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த ஜெய்பூர்- கோவை விரைவு ரயிலை சோதனையிட்டனர்.
சோதனையில் ரயிலின் B-1 பெட்டியில் சந்தேகத்துக்கு இடமாக இருவர் இருப்பதைக் கண்டு அவர்களின் உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது அதில் உரிய ஆவணங்களின்றி கட்டுக்கட்டாக பணம், நகைகள் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து இருவரையும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நகைகள், பணத்தைக் கொண்டுவந்தவர்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (48), தேனியைச் சேர்ந்த ராமநாதன் (25) என்பதும், ஜெய்பூரிலிருந்து 616 சவரன் நகைகள், ஏழு லட்சத்து 84 ஆயிரத்து 800 ரூபாய் ஆகியவற்றை உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்தது தெரியவந்தது.
பின்னர் நகைகள், பணத்தைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் அவற்றை ஜிஎஸ்டி அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், கைதான இருவரிடமும் நகைகள், பணம் எங்கிருந்து யாரால் யாருக்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இதையும் படிங்க: அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை