குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், ஆதரித்தும் நடைபெறும் போராட்டங்களால் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், காவல் துறை அனுமதியில்லாமல் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
போராட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கு நியாயமான கட்டுப்பாடுகள் உண்டு எனவும், போராட்டக்காரர்கள் வரம்பை மீறி செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் போராட்டங்கள் நடத்தப்படுவது தேவையற்றது எனவும், சிஏஏ சட்டம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இதுபோன்ற போராட்டங்கள் சட்டவிரோதமானது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து, அரசு சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆ. நடராஜன், குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டங்களால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், பள்ளிக் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கோ? பொது மக்களுக்கோ போக்குவரத்திற்கோ? எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார். மேலும், போராட்டத்தை ஒருங்கிணைக்கும் தலைவர்களோடு காவல் துறை சார்பில் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் 49 இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் மட்டும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: "சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை" அமைச்சர் உதயகுமார் பதில்!