முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவு, அரசு துறைகளின் அலுவலகங்கள் போன்ற பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வரும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமை செயலகத்திற்கு, நாள்தோறும் பல்வேறுதரப்பு மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் தலைமைசெயலகத்தின் பாதுகாப்பு, முக்கியத்துவம்கருதி அங்கே வருகை தரும் நபர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய நுழைவு சீட்டு வழங்கும் முறையை அமல்படுத்துவது தொடர்பாக, சென்னை காவல்துறை அதிகாரிகள் சோதனை முயற்சியை மேற்கொண்டனர்.
அதிகபட்சம் ஒருநாள்வரை செல்லுபடியாகும் இந்த நுழைவு சீட்டிற்கான சோதனை முயற்சியின் முதல்கட்டமாக, காவல்துறையினர், வருகைதரும் மக்கள் அனைவரிடமும், முகவரி உள்ளிட்ட அவர்களின் தகவல்களை பெற்றுக்கொண்டு தலைமை செயலகத்திற்குள் அனுமதி அளித்தனர். மேலும், அவர்களின் புகைப்படங்கள், கைப்பேசிகளுடன் இணைக்கப்பட்ட அச்சிடப்படும் இயந்திரங்களின்மூலம் அச்சிடப்பட்டு, உடனடியாக புகைப்படத்துடன் கூடிய நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்தக் கருவியை கண்டுபிடித்து உள்ளது. தற்போது ஒரு கருவி மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த முயற்சி வெற்றி பெற்றால் மேலும் மூன்று கருவிகள் உபயோகப்படுத்தப்பட உள்ளன. மேலும், இது சோதனை முயற்சிதான் என்றும், வாகனங்களில் வருபவர்களை இந்த முறையில் சோதித்து அனுப்புவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று சென்னை வெப்பேரியில் உள்ள மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திலும் நுழைவுச்சீட்டு வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: