சென்னை: கரோனா காலகட்டத்தில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற பாதுகாப்பு நடைமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடைமுறைகளை மேற்கொள்வது குறித்தும் பிகார் மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள் சுதீர் குமார், ரோகினி ஆகியோர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் இன்று (மார்ச் 17) ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, 'தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தபின்னர் தங்க, வெள்ளி நகைகள் 290 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் மதிப்பினை வருமானவரித்துறை தான் மதிப்பீடு செய்து கொடுக்கும்.
நத்தம் தொகுதி வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
பிகாரில் கரோனா வைரஸ் தாக்கம் தினமும் 12 ஆயிரம் என இருந்தபோதே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்பொழுது தினமும் 800 நபர்களுக்குத்தான் கரோனா பாதிப்பு இருந்து வருகிறது. கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தலை நிறுத்துவது குறித்து எந்தவிதமான தகவலையும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் ஒரு சில வழிமுறைகளை வழங்கியுள்ளனர். அதற்கேற்றவாறு சுகாதாரத்துறை செயல்படும். இருந்தபோதிலும் தமிழ்நாடு அரசு தான் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
தேர்தல் ஆணையம் கரோனா பரவலைத் தடுப்பதற்காக பரந்த இடங்களில் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு உள்ளாட்சித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை , காவல் துறை ஆகியவை பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
கரோனா பரவல் விதிமுறைகளை மீறியவர்கள் மீது அரசு தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் எனக் கூறியவற்றையும், பிற விதிமுறைகளையும் பின்பற்றுகிறோம்.
வங்கிகளில் பணம் எடுத்துச்செல்லும்போது ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு ஆவணங்கள் இல்லாத பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைப்பார்கள். உரிய ஆவணங்களைக் காட்டி கருவூலத்தில் இருந்து அப்பணத்தை கொண்டு வந்தவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அதிமுக, திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள இலவசங்கள் குறித்து எந்தவிதமானப் புகார்களும் வரவில்லை. தேர்தல் ஆணையத்தின் சிவிஜில் செயலி (Cvigil app) மூலம் புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. அந்தப் புகார்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் விதிமுறைகள் மீறிய புகார்கள் குறித்தும் உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளும்.
சிவிஜில் ஆப் மூலம் பணம் கொடுத்ததாக 51 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 30 புகார்கள் உண்மை இல்லை எனவும், 20 புகார்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கரூர் மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 350 புகார்கள் வந்துள்ளன. 38 நபர்கள் தங்களை மிரட்டுவதாகவும், மதரீதியாக பேசியதாக 6 வழக்குகளும், அனுமதி இல்லாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக 40 வழக்குகளும், 10 மணிக்குமேல் பரப்புரை மேற்கொண்டது தொடர்பாக 5 புகார்கள் என 1291 வழக்குகள் பதிவாகி உள்ளன.
முதியோர்களும், மாற்றுத் திறனாளிகளும் தபால் வாக்கு அளிப்பதற்கான, படிவம் 12-டி வழங்குவதற்கான தேதி முடிவடைந்துள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்களை வழங்கியது தொடர்பாக காவல் துறை, வருவாய்த்துறை, வருமானவரித்துறை ஆகியவை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தான் தேர்தலை நிறுத்துவது குறித்து ஆணையம் முடிவு செய்யும்.
தமிழ்நாட்டில் பதற்றமான வாக்குச்சாவடிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் பார்வையாளர்கள் வந்தப் பின்னர் தான் மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து முழுவதும் தெரியவரும்' என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ELECTION BREAKING:தொண்டரின் 'புட் பாய்சன்' பதில்; திடுக்கிட்ட உதயநிதி!