இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் கொடுப்பார்கள். இன்னும் சோதனை நடந்து கொண்டிருப்பதால் வேறு விபரங்கள் வெளியிட முடியாது. வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் எண்ணப்பட்டு வருகிறது. விரைவில் அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும். வாகனங்களில், அல்லது வேறு வழிகளில் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அது குறித்து சட்டப்படி விசாரணை நடத்தப்படும். ஆனால், கட்சிக்காரர்கள் வீடுகளில் பறிமுதல் செய்யப்படும் பணம் தொடர்பாக பல்வேறு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். வங்கிப் பணம் பறிமுதல் செய்யப்பட்டாலும் அதில் தனியார் தொடர்புகள் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும். வங்கிப் பணமாக இருந்தாலும் உரிய ஆவணங்கள் இல்லையென்றால் பறிமுதல் செய்யப்படும்.
பணம் பறிமுதல் தொடர்பாக வேட்பாளருக்கு தொடர்பு இருந்தால், அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என வருமான வரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். இதுதொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் தனிப்பட்ட முறையில் நடவடிக்கைகள் எடுக்க இயலாது.
வேலூரில் பணம் பறிமுதல் தொடர்பாக எவ்வளவு பணம் என்று மட்டும் வருமானவரித் துறையால், ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடுகள் குறித்து இன்னும் எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை.. தமிழகத்தில் இதுவரை 328 கிலோ தங்கம் 19.78 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 409 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 93.36 கோடி மதிப்பிலான தங்கம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்றார்.