மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் 2020 ஜூன் 19 அன்று காவல் துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்டனர். விசாரணையின்போது காவலர்கள் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
தந்தை-மகன் இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது நேற்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரும் நேரில் முன்னிறுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளரான ரவிச்சந்திரன் சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ் - பென்னிக்ஸை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதாகவும், உயிரிழந்தவுடன் ஆவணங்களை மாற்றியதோடு, தந்தை மகன் மீது பொய் வழக்கையும் பதிவுசெய்ததாகச் சாட்சியம் அளித்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்த வழக்கில் காவல் நிலையத்தில் தந்தை - மகன் இருவரையும் துன்புறுத்தியதாகத் தலைமைக் காவலர் ரேவதியை தொடர்ந்து தற்போது சிறப்பு சார்பு ஆய்வாளரும் தந்தை-மகன் இருவரையும் துன்புறுத்தியதாகச் சாட்சியம் அளித்துள்ளது வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் ஐந்து காவலர்கள் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தற்போது குலசேகரபட்டினம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்துவருகிறார். அவரை வரும் 21ஆம் தேதியன்று ஆய்வாளர் ஸ்ரீதர் நேரடியாகவும், மற்ற மூன்று பேரின் வழக்கறிஞர்களும் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது.
இந்த வழக்கில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி, உறவினரான தேசிங்கு ராஜா, ஜெயராஜின் நண்பர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்டோரிடமும் சாட்சியம் விசாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அரியலூரில் ஆசிரியர்கள் போக்சோவில் கைது