சென்னை: சரத்குமார், ராதிகா, தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட செக் மோசடி வழக்கில் இன்று எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு தலா ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரேடியன்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்திடம் கடந்த 2014ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தனர்.
ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் பணத்தை திருப்பி தருமாறு கோரிய நிலையில், மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் 75 லட்ச ரூபாய்க்கான 2 காசோலையும்,
சரத்குமார் சார்பில் தனிப்பட்ட முறையில் 10 லட்சம் மதிப்புள்ள 5 காசோலையும் வழங்கப்பட்டது.
மொத்தம் 7 காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிடவே, ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில 7 செக் மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இரு வழக்கில் சரத்குமார், ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும், மற்ற 5 வழக்கில் சரத்குமாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்குகள், முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். நடிகை ராதிகா சரத்குமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மொத்தமுள்ள 7 வழக்குகளில் சரத்குமார் மட்டும் தொடர்புடைய ஐந்து வழக்குகளில் தலா ஓராண்டும், சரத்குமார் ,ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும் தொடர்புடைய இரு வழக்குகளில் மூவருக்கும் தலா ஓராண்டும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செக் மோசடியில் ஈடுபட்டதற்காக மூவரும் தொடர்புடைய இரண்டு வழக்குகளில் 2.8 கோடி ரூபாய் அபராதமும், சரத்குமார் தொடர்புடைய 5
வழக்குகளில் 50 லட்சம் அபராதம் என மொத்தம் 3 கோடியே 30 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது, அதனை விசாரித்த நீதிபதி 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். ராதிகா சரத்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.