சென்னை, மாநகரப் பேருந்துகளின் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்களும் வாகன ஓட்டிகளும் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் பேருந்துகளின் பக்கவாட்டில் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்கள், பயணிகள் சக்கரங்களில் சிக்கி உயிரிழப்பது தடுக்கப்படும். அதே நேரத்தில், சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களிலும், வேகத் தடைகளிலும் அவை உரசாமல் இருப்பதற்காக தடுப்பு ஸ்பிரிங்குகளுடன் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
தடுப்புக் கம்பிகள் பொருத்த பேருந்து ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய் செலவாவதாகவும், சென்னை மாநகரப் பேருந்துகள் முழுவதும் இதுபோன்று அமைப்பதற்கு 20 கோடி ரூபாய் தேவைப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'நான் வெற்றி பெறவேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார்’ - அமைச்சர் ஜெயக்குமார்
தற்போது சோதனை அடிப்படையில் மூன்று பேருந்துகளுக்கு இதுபோன்று தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இது வெற்றி பெற்றால் அடுத்தகட்டமாக கூடுதல் பேருந்துகளுக்கு இதுபோன்று பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.