இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில் நோய் தடுப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் எல்கேஜி தொடங்கி 5ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு வரும் மார்ச் 31ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா நோய் அதிகரிப்பதைத் தடுக்க தமிழ்நாட்டு மக்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். எல்லையோர மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை மூடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்
வழிபாட்டுத் தலங்களுக்கு வருவோருக்கு கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்களில் குழந்தைகள், வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்திய முதலமைச்சர், சுத்தமாக இருந்துகொள்ள பொதுமக்கள் அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களான தேனி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, நெல்லை, ஈரோடு, கன்னியாகுமரி,
திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடபடவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பறவைக்காய்ச்சல் பரவியதாக வதந்தி: பண்ணைகளில் அலுவலர்கள் ஆய்வு