சென்னை: கரோனா கால ஊக்கத்தொகையாக, 108 அவசர ஊர்தி ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா கால தடுப்புப் பணிகளில், 108 அவசர ஊர்தி ஊழியர்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக, ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளை உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனை அழைத்துச் சென்று காப்பாற்றி வருகின்றனர்.
இதுபோன்று தடுப்புப் பணிகளில் ஈடுபடும், 108 அவசர ஊர்தி பணியாளர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கரோனா காலத்தில் பணியாற்றிய 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகையை அரசு வழங்கியுள்ளது.
அதேபோல், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த, திருப்பூரைச் சேர்ந்த அவசர ஊர்தி ஊழியரின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் மத்திய அரசு இழப்பீடு வழங்கியுள்ளது.